Wednesday 4 May 2016

காந்தவராயன் , சேந்தவராயன்



வன்னிய வீரன் 



உவமை கவிஞர் கவிஞர் சுரதா அவர்களால் எழுதப்பட்ட

 வன்னிய வீரன் என்னும் இக் குறுங்காவியம் உண்மைக்  கதையைத் தழுவி 

எழுதப்பட்டது . விஜய நகர பேரரசரான கிருஷ்ணதேவராயரின் படைகளை எதிர்த்து

 வீரமுடன் போரிட்ட காந்தவராயன்,  சேந்தவராயன்  என்ற இரு வன்னிய 

சகோதரர்களான குறுநில மன்னர்களின் வரலாற்றை கூறும் விதமா 

அமைந்துள்ளது இக் காவியம். சுரதா ழுதிய தேன்மழை என்னும் நூலில் 

இடம்பெற்றுள்ளது இக்குறுங்காவியம் .






தொண்டை நாடு


குறிஞ்சித் திணையைக் குறித்திடும் மலைகளும் 
குன்றினேன் என்று குன்றிய குன்றமும் 
உதித்தசெங் கதிரின் ஒளியைத் தடுத்து
நிறுத்தியும் நிழலால் நிலத்தை மெழுகியும் 
வானுற வோங்கி வளர்ந்த காடுகளும் 
பயன்தரும் பொழிலும் பழமுதிர்ச் சோலையும் 
பனிப்புனல் ஏரியும் பளிங்கைக் கரைத்தே 
ஓட விட்டாற் போன்றநீ ரோடையும் 
சாகாக் கடலும் தாமரைத் தடாகமும் 
தளராப் பயன்தரும் சதுர வயல்களும் 
வாழையும் மங்கல மஞ்சளும் இஞ்சியும்
இயற்கை எழிலை ஏந்திக் காட்டிட; 

மழைவயிறு கிழிக்கும் மாட மாளிகை, 
மான்விழிச் சாளரம் வைத்த வளமனை, 
ஆறுபோற் கிடந்த அகல்நெடுந் தெருக்கள், 
கூறுநல் லடியார் கோபுரக் கோயில்கள், 
ஓங்குபே ரழகினை ஓர்புறம் கூட்டிட;


 சான்றோர்


சீர்தளை கொண்ட செந்தமிழ்ச் செய்யுள் 
தொடுத்துக் காட்டிய தொகைநூற் புலவர்க்குக்
கொடுத்துக் காட்டிய கூவத்து நாரணன்,
இடையறா தளித்த சடைய நாதன், 
தேம்பாது வழிங்கிய பூம்பாவை முதலியார், 
நிறைந்த புகழாற் சிறந்தசீர் காழி 
அருணா சலகவி ராயரை ஆதரித்தே 
வரிசை யறிந்து வழங்கிய மணலி 
முத்து கிருட்டின முதலிபோன் றோரும், 

சைவந் தழைத்திடத் தனிநூல் ஒன்றினைத் 
தூக்கெனும் செய்யுளால் ஆக்கி அருளிய 
சேக்கிழார் அடிகளும், செஞ்சொல் கொஞ்சும் 
தஞ்சை வாணன் கோவைசெய் தருளிய 
பொய்யா மொழியரும், பொன்வினை களத்தூர் 
புகழேந்திப் புலவரும், பொங்கு தமிழ்ச்சுவை 
தங்கிய பாடல்கள் தங்கிய பலநூல் 
பாடி அருளிய படிக்காசுப் புலவரும் 
செய்த நூற்களின் சிந்தனை உலவிட;

வாடாத சான்றோர் வகுத்தநல் லறமும் 
பிழைபடாக் கற்பும் பின்படா வீரமும் 
கொண்டுபுகழ் கொண்டது தொண்டை நன்னாடு

ஆடிற்று நாடு

சொல்லத் சொல்லத் தொடர்ந்தே பரவும் 
நல்ல புகழொடும் நடுங்காத் திறத்தொடும்
இத்தொண்டை நாட்டினை இளந்திரையன் ஆண்டனன்,

மாலை வெகுண்ட மன்னவன் மாண்டபின் 
மரபுமுறை கெடாமல் மற்றவர் ஆண்டனர்,
ஏற்றிய விளக்கில் எண்ணெய் குறைந்திடின்
வளர்ந்த வெளிச்சம் வரவரக் குறைந்திடும்,
அதுபோல், பின்வந்தோர் ஆட்சி தளரவே,
பகையும் கொடிய பசியும் பிணியும்
குறையாக் கவலையும் குறும்புக் கலகமும்
அடிக்கடி தோன்றவே ஆடிற்று நாடு!
வடபெருங் கடலையும் மணிக்கடல் நீரையும்
இத்தமிழ் நாட்டின் எல்லைக ளாக்கி,
மொழியை ஒன்றாக்கி முடியைமூன் றாக்கி
வீரம் விளைந்தமூ வேந்தர் மரபிலே
வந்தோர்ஆண்ட மணித்திரு நாடாம்
தொண்டை நாடு சண்டைநா டானது!

தாய்மொழிப் பற்றும் தன்மான உணர்ச்சியும்
காலை நேரத்து நிழல்போல் குறைந்ததால்
சார மற்ற சரித்திரம் வளர்ந்தது,

வேற்று நாட்டினர் விழுங்கினர் தமிழரை!
தூங்கிய தமிழகம் தோற்றது பிறரிடம்!
புலிக்கொடி வீழவே எலிக்கொடி பறந்தது!

ஆந்திர அரசு



வேர்கொண்ட புகழொடு சிறந்து விளங்கிய
தேர்வேந்தன் கிருட்டின தேவன் என்பான்,
செங்கழுநீர்ப் பட்டெனும் செங்கற் பட்டுக்குப்
பக்கத்தில் உள்ள பழம்புக ழூராம் 
விடையீச் சுரத்தில் வீற்றர சாண்டனன். 

மரத்தின் கீழ்வளர் மரம்போல், ஒருசிலர் 
அவனுக் கடங்கி ஆட்சி செய்தனர்,


வீரன் காந்தவராயன்


காந்தவ ராயன் கட்டிளங் காளை. 
இமய மலையே எதிர்த்த போதிலும் 
அசைப்பது கடினம் அன்னவன் தோளை! 

அவனோ, குறுநில மன்னவன்; ஏந்துவாள் 
வெற்றிகள் பெற்ற விழுப்புண் வீரன்! 
பகைமுகங் கண்டு நகைமுகங் காட்டிய 
நெருப்பு வன்னியன்! நினைப்பில் திண்ணியன்! 

தாழ்ந்துபோய் உள்ளம் தளர்ந்துபோ யிருந்த 
தமிழரை எல்லாம் தட்டி யெழுப்பிய 
தலைவன்; இரும்பிடர்த் தலையார் போன்றவன்; 
கிருட்டின தேவனை விரட்ட முயன்றவன்,


உரிமைப் போர் 

வன்னிய வீரனை அந்நியத் தெலுங்கன் 
அடக்குதற் காகப் படைகளை அனுப்பினான்; 
வந்த படைகளை வன்னியன் வீழ்த்தினான்; 
பின்னரும் ஆந்திரன் பெரும்படை அனுப்பினான்,
முரட்டுக் குதிரைகள் முன்னே சென்றிட, 
வினைத்தொகை யானைகள் விரைந்து நடந்திட,
வீர வன்னியன் வெறியோ டெழுந்தனன்; 
அன்னவன் தம்பியும் அவனோ டெழுந்தனன்! 

தடித்த தோளினர் தடக்கை வாளினர் 
வெடித்த சிரிப்பினர் விழிக்கண் தீயினர் 
கடித்த வாயினர் கருங்கடற் குரலினர் 
தடித்த தோளினைத் தட்டி யதட்டினர்!

வேங்கை வன்னிய வீரரும் அதட்டினர்,
இரும்பைத் திருத்தி இயற்றிய வாளினால்
அண்ணனும் தம்பியும் ஆற்றலைத் காட்டினர்.
வெட்டினர் தமிழர்! வீழ்ந்தனர் ஆந்திரர்!
குருதி பருகிக் கொடுவாள் சிவந்தது.

தலைகள் வீழ்ந்தன; மறவர் தடத்தோள்
மலைகள் சாய்ந்தன; மாற்றார் கைவேல்
இலைகள் உதிர்ந்தன; எல்லாம் சிதைந்தன!

பழுத்தசெங் கதிர்போய் படுக்கும் மேற்றிசைக்
கடற்கரை வழியே, கைவேல் கீழ்விழக்
கொங்கரை விரட்டிய கோமகன் ஆய்வேள்
போன்று விரட்டினான் போர்வீர வன்னியன்!
விடையீச் சுரத்து மீசை ஆந்திரன்
தீயென ஓங்கும் தீராப் பகைவரைச்
சூழ்ச்சியின் மூலம் தொலைக்கத் தொடங்கினான்.

புல்லுருவி முளைத்தது 


முதலி ஒருவன்; அந்த முதலியோ
தேளொடு பாம்பொடு சேர்க்கத் தகுந்தவன்;
சதிசெய் வதிலே சகுனிபோல் சமர்த்தன்;
பார்புகழ் காந்தவ ராயனின் பகைவன்.

சுரீரென மாந்தரைச் சுடுஞ்சுடர்ச் சூரியன்
வகுத்த பகலும் வான்மீன் இரவும்
ஓடின; இழைத்த நாட்களும் ஓடின,
என்றென்றும் விரிந்தே இருந்திடும் வானம்,
ஈச்சங் கனிபோல் இருண்ட தோர்நாள்,
வானம் இருண்டதால் இருண்டது வையகம்!
இருண்ட பொழுதிலே எழுந்தான் முதலி.

கரடி புலிகள்வாழ் காட்டிலே நடந்தும், 
பாதையைத் தடுக்கும் பருவதம் கடந்தும் 
பொன்முடித் தெலுங்கன் முன்வந்து வணங்கி 
நின்றனன் அந்த நெருப்பு முதலி! 

ஆந்திர வேந்தன் அவனை நோக்கி 
"நீ யார்?" என்று நிமிர்ந்து கேட்டனன். 

"அடியேன் தங்கள் பகைவனின் பகைவன்; 
குடிகளைக் காத்திடும் கொற்றவா கேளும்; 
நிலத்திற்கு வீரனாய் நீருக்கு முதலையாய், 
விரிந்த காட்டுக்கோர் வேங்கையாய் இருப்பவன் 
சாந்தமே அறியாக் காந்தவ ராயன். 

வாட்களோ கொல்லன் வடித்தகூர் வேலோ,
ஆட்களோ அவனை அழிப்பது கடினம்!
ஆயினும் அன்னவன் ஆசைக் கிழத்தியாம் 
கொஞ்சும் வஞ்சகி குப்பாச்சி என்னும் 
வேசியைக் கொண்டுநாம் வீழ்த்தலாம் அவனை"
என்று கூறினான் இயற்கை வஞ்சகன். 

அன்னவன் செய்தியை மன்னவன் கேட்டு 

மகிழ்ச்சி யடைந்தான்! மலர்ச்சி யடைந்தான்! 
நின்ற முதலியை நிருபன் நோக்கி, 
"வாலிபம் கடந்த வயோதிக முதலியே! 
நன்று நன்றுநின் நன்றியை என்றுமே 
மறவேன் யா" னென மகிழ்ந்து கூறி 
ஆறா யிரம்பொன் அவனிடம் நீட்டவே 
இழிந்தோன் இருகரம் ஏந்தி வாங்கினான். 
வாங்கிய பரிசொடு, வீங்கிய நினைவொடு, 
வேம்பு முதலி விடைபெற்றுச் சென்றனன்.
காட்டிக் கொடுத்த கயவன் சென்றதும்
வெருகூரில் வாழ்ந்த வேசிகுப் பாச்சியை
அழைத்துவர வேந்தன் ஆட்களை அனுப்பினான்,

ஆந்திர வேந்தனின் அரண்மனைக் காவலர்
வெருகூர் நோக்கி விரைந்து சென்றனர்.
பஞ்சனைப் பறவைவேசி குப்பாச்சி யோர்விளம்பர விளக்கு!
பாவின் இனத்தைச் சேர்ந்த பரத்தை! 

ஐந்தும் ஐந்தும் ஐந்தினோ டாறெனச்
செப்பும் வயதினள்; செம்பொன் நிறத்தினள்; 
பேசியே உருக்கும் பெருங்கலை வல்லி!

மதன வித்தார மாலையே அன்னவள்
புதிய கொக்கோகப் புத்தக மாகும். 

'சிலேட்டும தேகம்' அமைந்தவள் ஆதலின் 
கூந்தல் நீண்ட கோதையாய் விளங்கினாள், 
காம்பவிழ்த் துதிர்த்த கனியுருக் கொண்டவள், 
குழைத்து முடியிடும் கொண்டைச் சொருக்கினால், 
இடையினால் ,நடையினால், இயந்திரப் பார்வைப் 
படையினால்,கலப்படம் படிந்த சொல்லினால், 
பாதி உணர்ச்சியால்,மீதி நடத்தையால்
மாவீரன் காந்தனை மயக்கி வந்த 
பஞ்சனைப் பறவை! வஞ்சக வாகனம்! 
ஆந்திர வேந்தனின் அரண்மனைக் காவலர் 
வெருகூர் வந்து வேசியைக் கண்டு 
மன்னன் உரைத்ததை மாதுக் குரைத்தனர். 
அன்னவள் கேட்டாள்; அரண்மனைக் கெழுந்தனள்.

பொன்னிற மாலை அந்திப் பொழுதிலே 
வந்து சேர்ந்தனள் வாடகைப் படகு.வினையின் விதை
ஆந்திர வேந்தன் அவளை நோக்கிக்
"காந்தவ ராயனைத் தீர்த்துக் கட்டி,
அன்னவன்தலையை என்னிடம் காட்டினால்
பலநூறு வராகன் பசும்பொன் பெறலாம்"
என்று கூறினன்: ஏந்திழை ஒப்பினள்,
விரைவில் வருவதாய் விடைபெற்றுத் திரும்பினள்.
 
இயற்கை சிரித்தது


கூன்மலர் என்று குறிப்பிடும் பாதிரிப் 
பூக்களும் மாதவி மரத்தின் பூக்களும் 
தேனொடு வாயைத் திறந்திடும் காலம்.

குட்டி யானைகள் கொட்டாவி விடுதல்போல் 
இன்னிசை மூங்கிலில் எழுந்திடும் காலம், 
தேர்தேர்ந் தெடுப்பதிற் சிறந்தவேள் ஆய்போல் 
தேன் தேர்ந்தெடுக்கத் தெரிந்த வண்டுகள், 
காந்தாரம் பாடிக் களித்திடும் காலம். 

செந்தீ போன்ற சிறந்தமாந் தளிரைக் 
குயிலின் கூட்டம் கோதிக் கோதிக் 
குறடுவாய் திறந்தே கூவிக் கூவி 
இசையமு தளிக்கும் இளவேனிற் காலம். 

மையல் இரவு மலர்ந்தது! மூவைந்து 
நாட்கள் ஏறிய நல்ல வெண்ணிலா 
வட்டம் நீல வானில் மிதந்தது!

ஒப்பனைக் களஞ்சியம் 


குறைந்த சிற்றடையும் நிறைந்தபே ரெழிலும் 
கொண்ட பரத்தை குப்பாச்சி என்பாள், 
ஐம்பாற் கூந்தலை ஒருபா லாக்கியும் 
கோதி முடித்தே கோலமலர் சூடியும் 
கையால் எழுதா வரியொடு வளர்ந்த 
பொய்யான விழிக்கும் புதியமை யூட்டியும் 
ஆய்ந்தளந் தியற்றிச் செய்தநல் லாடையை
விரித்தே யுடுத்தும் மேனி மினுக்கியும்,
பருதி வட்டத்தைப் பழிக்கும் பதக்கம் 
இறுதிவரை கெடாதபே ரெழில்முத் தாரம் 
முதலாம் அணிகளை முறைகெடா தணிந்தும்
கண்ணாடும் மங்கை கண்ணாடி பார்த்தனள். 

தூதுத் தோழிகள் சூதப் பரத்தையின் 
பாதச் சிலம்பினைப் பக்குவப் படுத்தினர்.

"வெள்ளை நிலவு விழித்ததா?" என்றே 
அன்னவள் கேட்டாள், "ஆம்" என்றாள் தோழி.

நிலாமுற் றத்திலே உலாவ வெழுந்தனள், 
நடந்தனள் நங்கை; நடந்து செல்கையில் 
அப்படி இப்படி அவளிடை அசைந்தது; 
அழகு மல்லிகை அரும்பென விளங்கிய
காலில்சதங்கை `கலீர்கலீர்` என்றது.
நீல வானத்து நிலவையும் மீனையும் 
பேரழகி நோக்கிப் பெருமூச்சுப் வீட்டனள். 
வெந்நீ ராடி வியர்த்ததோ எனும்படி 
கள்ளப் பரத்தையின் கண்கள் சிவந்தன; 
உருண்டு வெளிவந்த உதடுகள் துடித்தன;

முன்வளர் புருவம் முட்க ளாயின;
சொற்களோ பருக்கைக் கற்க ளாயின. 

அந்தித் தென்றல் சந்திக்க வந்தது; 
வந்த தென்றலை வஞ்சி வெறுத்தனள்.

விருந்துக்கு வந்தான்

பரத்தையின் மடியிற் படுத்துக் புரண்டிட 

வன்னிய வீரன் வந்தனன் ஆங்கே!

பொதுவுடல், பொதுமுகம் பொதுவிழிப் பரத்தை 

நாடி வந்தோனை ஓடிவர வேற்றனள்.



காமப் பசியோடு வந்தோன்,கணிகையின் 

பேரழகைக் கண்டு பெரு மூச்சு விட்டான்
;
தோளழைகைக் கண்டு துடித்துப் பதைத்தான்.



நெருப்பினால் உருக்கிய நெய்யின் நிறத்தினள்
,
சிரிப்பினால் உருக்கிச் சிற்றின்ப இதழ்களால்

கிளிமழலை செய்தனள்; கீழ்மகள் செய்த 

சொல்வழி நின்றத செவியே, அன்னவள் 

விழிவழி நின்றது வேந்தன் மணிமுகம்! 




பறந்து வந்தவன் பரத்தையை நோக்கிக்

"காதங் கமழ்ந்திடும் கருங்குழல் மாதே
! 

கடல்படு முத்தையும் காடுபடு பொருளையும் 

மலைபடு மணியையும் மதித்திடா துன்றன் 

உடல்படு பொருள்தொட ஓடோடி வந்தேன்;" 

அடம்பம்பூக் கிழிக்கும் அன்னமே! உன்றன் 

கண்ணழகு நீலக் கடலுக்கு வருமோ?

பொருந்தி வளரும் புருவத்தின் வளைவு, 

வல்வில் ஓரி எடுத்து வளைத்தே


வெற்றி பெற்ற வில்லுக்கு வருமோ?
எடுத்துக் கடிக்கும் இடமெல்லாம் இனிக்கும்
கரும்பே! தேனே! காமத்துப் பாலே! 
கனலும் புனலும் காற்றும் புகையும் 
கலந்த கலப்பே கருநிற மேகம்! 
பனியும் பழுத்தசெங் கனியும் பற்பல 
மதுமலர்த் தொகையும் மங்கைநின் தேகம்! 
எனக்குநீ வந்து வாய்த்ததென் யோகம்! 
நிலத்திற் கழகு நெல்லாம், கரும்பாம்; 
தடாகத்திற் கழகு தாமரைப் பூவாம்; 
நெஞ்சத்திற் கழகு நல்ல நினைவுகள்;
மஞ்சத்திற் கழகு மாதே நீதான்! 
உலவும் தென்றல் உடல்வெப்பம் தீர்க்கும்; 
தெளிந்தசொல் ஏறிய திருவா சகமோ 
தப்பாது நெஞ்சின் வெப்பத்தைப் போக்கும்; 
இன்பமே! உன்கை உன்மீது பட்டால், 
பட்ட இடமோ பனிச்சுனை யாகும்! 

தங்கப் பதுமையே! தமிழுக் கிருவராம்! 
இன்பம் காணவும் இரண்டுபேர் வேண்டும்!

தெளிவா யிப்போது தெரியா நின்னிடை, 
கருவுறின் அப்போது கட்டாயம் தெரியும்
அன்றோ?" என்றான், அதைக்கேட்டுப் பொதுமகள் 
நாணங் காட்டி நகைமுகங் காட்டி 
அம்புப் பார்வையை அவன்மீது பாய்ச்சினாள்,
ஆரந் தாழ்ந்த அணிகிளர் மார்பும் 
தாள்தோய் தடக்கையும், தறுகண் ஆண்மையும் 
முற்றிய புகழும் முதிரா இளமையும் 
பெற்றுத் தனித்திறன் பெற்று விளங்கிய

விசயா லயசோழ வேந்தன் என்பான், 
வேரொடு பகைவரை வீழ்த்திய நாளில், 
அங்கத்தில் தொண்ணூற் றாறுபுண் பெற்றனன்!
விழுப்புண் பெற்று விளங்கிய காந்தவன், 
பொய்விழிப் பரத்தையின் போர்விழி பாய்ந்ததால்
பழிப்புக் குரியபுண் பலநூறு பெற்றனன்!

பால்வகை தெரிந்த பரத்தையோ மீண்டும் 
கொடுவாள் வீரணைக் கூர்ந்து நோக்கிக் 
"கொப்புளங் கொண்ட குளிர்வானில் மிதக்கும் 
இந்த வெண்ணிலா ஏன்புகை கின்றது? 
கூறுவீர்" என்று குழைந்து கேட்டனள், 
திப்புத்தோள் வீரன் சிறுநகை செய்தே, 
"என்னடி பெண்ணே! ஈர வெண்ணிலா 
புகைகின்ற தென்றுநீ புதிர்போடு கின்றனை! 
அமுதுசூல கொண்டநல் லழகு வெண்ணிலா 
வட்டத்தில் புவிநிழல் வந்து படிவதால் 
புகைதல் போன்று புலப்படு கின்றது.
கோதையே!" என்று கூறினன் வீரன்.

அவனை மயக்கினால்அதிகம் கிடைக்கும், 
இவனை இழுத்தால் ஏராளம் பெறலாம், 
விழிவலை விரித்தால் வீழ்ந்திடும் வானிவன்,
என்னும் கருத்தை இதயத்தில் வைத்தே 
கணிக்கக் கூடிய கணிகை அதுகேட்டு 
மொட்டுப் புன்னகை முகத்திற் காட்டினாள்.

மோது காமத்தில் மூழ்கி வந்தவன் 
சூதுப் பரத்தையின் தோள்தொட நெருங்கவே
ஊடினாள்; சற்றே ஒதுங்கினாள் உலாமகள்!


தொடங்கிற்று நாடகம்

வாள்தொட்டுப் பயின்று வந்தோன், பரத்தையின்
தொள்தொட்டுப் பயில தொடங்கும் வேளையில்,
அவிழ்ந்தவெண் தாழைபோல் அவளுடை அவிழ்ந்தது!
சித்திரக் கன்னம் சிவந்தது: வாயிதழ் 
பெற்றசெந் நிறமோ பெயர்ந்தது வேறிடம்! 

காந்தவ ராயன் கணிகையை நோக்கி, 
''தவளை குதிக்கும் தடாகத்தில்வளராக் 
குவளை சிவந்தது: குமுதம் வெளுத்தது 
கோதையே!''என்று கூறினான்: அதுகேட்டுச் 
சீரொடு நோக்கிச் சிரித்தபடி திரும்பிக் 
கொண்டனள் கொலைசெயும் நோக்கம் கொண்டவள்.

நின்றவள் நகர்ந்தாள், நிழலும் நகர்ந்தது.
மங்கை நகரவே மன்னனும் நகர்ந்தனன். 

மயக்கிய மங்கையும் மயங்கிய மன்னனும்
பள்ளியறை நோக்கிப் பறந்து சென்றனர்! 


தொட்டான்! தொட்டான்!
கவிழ்ந்து பூப்பூத்து நிமிர்ந்துகாய் காய்க்கும்
எள்ளில் எடுத்தநல் லெண்ணையின் நுரைபோல்
மென்மை கொண்ட மென்மலர் தூவிய
மஞ்சத்தில் அமர்ந்தனள்; மன்னனும் அமர்ந்தனன்.

தக்கோலம் தின்று தலையில்பூச் சூடிப்
பொய்க்கோலம் செய்த புணரிப் பரத்தை,
அழகுச்செந் தினையின் அரிசியைப் போன்ற
நரம்பு நிரம்பிய நல்யாழ் எடுத்தே
இசைய வைத்திடும் இசைத்தமிழ் வளர்த்தனள்!

மன்னவன் கேட்டு மயங்கினான்; மயங்கி 
மெத்தைப் பரத்தையின் மெல்லிய கைவிரற் 
கொத்துக்கு முத்தங் கொடுத்து நிமிர்ந்தான்!

அமுதமா? நஞ்சா?


எச்சில் பரத்தை இடம்விட் டெழுந்துபோய்க் 
கொல்லும் மருந்தைக் கொட்டித் கலந்த 
பழச்சாறு கொணர்ந்தே "பருகுவீர்" என்றனள்.

"பாவைநீ இருக்கையில் பழச்சா றெதற்கு?
வேண்டாம் வஞ்சியே வேண்டாம்" என்றனன்.

"வெண்ணிலா வெளிச்சம் விண்மீ திருப்பினும் 
எண்ணெய் விளக்கினை ஏற்றாதார் உண்டோ? 
பருகுவீர்"என்றே பரத்தைவற் புறுத்தவே, 
கிண்ணச் சாற்றினைக் கிளர்ச்சியோடு பருகினான்.

வீரன் வீழ்ந்தான்!

ஆதிப் பொதுமகள் அளித்தசா றதனில் 

தோன்றா எழுவாய்போல் தோன்றா திருந்த

புதுவிடம் அன்னவன் உடலுட் புகுந்ததால் 

முத்தங் கொடுத்து முடித்தோன் முடிவிலோர் 

சத்தங் கொடுத்தபடி சாய்ந்தனன் மெத்தையில்!

மூச்சு முடிந்ததால் பேச்சும் முடிந்தது
:
பிடியிடைப் பரத்தை பின்னர், மாண்ட

மன்னவன் உடலை வாட்கொண்டு வெட்டி,

வெட்டுண்ட தலையை வேந்தனுக் கனுப்பினாள்.



இரவல் வெற்றி! 

பகைவன் தலையைக் பார்த்த மன்னவன், 
தோள்தட்டிக் கொண்டே தொடர்ந்து சிரித்தனன்! 

ஒத்தாசை செய்த ஓவியப் பாவைக்குப் பத்தா 
யிரம்பொன் பரிசாய் அனுப்பினான்!

வேல் பாய்ந்தது

தாசியின் சூழ்ச்சியால் தமையன் மாண்ட 
செய்தியைக் கேட்ட சேர்ந்த ராயன், 
இடிந்தான்; உள்ளம் ஒடிந்தான்! "அந்தோ! 
அண்ணா" என்றே அலறினான், அழுதான்: 
ஓடினான், ஓடினான்: தேடினான் தாசியை; 
சேர்ந்தவன் கரத்திற் சிக்கினாள் பரத்தை, 
அத்தனை பேரும் அகப்பட்டுக் கொண்டனர்.

பிணாவூர்!

பிடிபட் டோர்தமைப் பிணைத்துக் கட்டியே 
உருவிய வாளினால் ஓங்கி வெட்டினான்! 
வென்ற வஞ்சகம் வீழ்ந்தது! வீழாது 
நின்ற செங்கதிர் நெருப்பும் வீழ்ந்தது! 
பிழைபுரிந் தோரைப் பிணைத்துக் கட்டி 
இழுத்துச் சென்ற இடமென்ப தாலது 
`பிணாவூர்` என்னம் பெயரைப் பெற்றது!

நெஞ்சில் நிறுத்துங்கள்!

அறிவிற் சிறந்தோ னாயினும் காந்தவன் 
ஒழுக்கம் இழந்ததால் உயிரையே இழந்தான்!

ஆயிரம் புதுமைகள் அமைந்தநூ லாயினும் 
அந்நூல் குறித்தொரு பாயிரம் அவசியம், 
அதுபோல் ஒழுக்கமும் மாந்தர்க் கவசியம் 
பழுக்கும் பெருமை பெறவே 
ஒழுக்கம் வேண்டும் உலகத் தீரே!